மும்பை: பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது இறப்பு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி (54). சிவகாசியை சேர்ந்த இவர், தனது குழந்தை பருவத்திலேயே திரையுலகில் நுழைந்தார். தமிழல், துணைவன் என்ற படத்தில் கடவுள் முருகன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு, குழந்தை கதாப்பாத்திரத்தில் பல்வேறு படங்களில் நடித்தார்.
தொடர்ந்து, இளம் பருவத்தில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்த ஸ்ரீதேவி தமிழில் முதன்முதலில் 16 வயதினிலே படம் மூலம் கமலுக்கு ஜோடியானார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை அடுத்து மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் திரையுலகில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வலம் வந்தார்.
இதன் பிறகு, தயாரிப்பாளர் போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்துக் கொண்டார். இதனால், திரையில் நடிப்பதற்கு முழுக்குப் போட்ட ஸ்ரீதேவி நீண்ட இடைவேளிக்கு பிறகு, இங்கிலீஷ் விங்கிலீஷ், புலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவருக்கு கடந்த 2013ம் ஆண்டில் மத்தி அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஸ்ரீதேவி பெற்றுள்ளார்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி தனது கணவர், இரண்டு மகள்களான ஜானவி மற்றும் குஷி ஆகியேருடன் துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்றனர். அங்கு, திருமண நிகழ்ச்சியில் இருந்தபோதே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே அவரது உயிர் பிரிந்தது.
ஸ்ரீதேவியின் இறப்பு செய்தியை கேட்டு திரையுலகினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும், அவருடைய இறப்பு இந்திய சினிமாவுக்கே ஓர் பேரிழப்பு எனவும் திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.