நல்ல நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்.. மத்திய அரசு அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 27, 2019, 09:19 AM IST

நல்ல நிர்வாகத்தில் முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்து மதிப்பீடு செய்ய இதுவரை சீரான குறியீடு எதுவும் இல்லை என்று மத்திய அரசின் பணியாளர் நலன்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, புதிதாக இந்த மதிப்பீடு செய்வதற்கு இந்த துறை துவங்கியுள்ளது. இதன்படி, பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்று 3வகையாக பிரித்து தற்போது ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

இதில், பெரிய மாநிலங்கள் பட்டியலில் நல்ல நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் வகிப்பதாக கூறியுள்ளது. நல்ல நிர்வாகத்தில் 2வதாக மகாராஷ்டிரா, 3வதாக கர்நாடகாவும் உள்ளன. இதைத் தொடர்ந்து, சட்டீஸ்கர், ஆந்திரா, குஜராத், ஹரியானா, கேரளா, ம.பி., மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, பீகார், கோவா, உ.பி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

இதே போல், வடகிழக்கு மாநிலங்கள் பட்டியலில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்திலும், யூனியன்பிரதேசங்கள் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்திலும் உள்ளன.

ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்குத்தான் மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. தமிழக வேளாண்மைத் துறைக்கு கிருஷி கர்மான் விருது உள்ளிட்ட விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் துறை சமீபத்தில் மத்திய அரசின் 13 விருதுகளை வென்றது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக சுகாதாரத் துறை மத்திய அரசின் விருது பெற்றிருக்கிறது.

You'r reading நல்ல நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்.. மத்திய அரசு அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை