பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், பா.ஜ.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர்களாகி, கல்வியை காவிமயமாக்குகிறார்கள் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும்” என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொங்கல் விடுமுறையை ரத்து செய்து, தமிழர்களின் மனதில் நீங்காத கோபத்திற்குள்ளான பா.ஜ.க. அரசு, இப்போது பொங்கல் திருநாள் நேரத்தில் இப்படியொரு உரையாற்றும் நிகழ்ச்சியை பிரதமர் மூலம் ஏற்பாடு செய்து, அதைத் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையில் பள்ளிக்கு வந்து கேட்க வேண்டும் என்று “எடுபிடி”அரசு மூலம் கெடுபிடி செய்து ஆணையிடுவது மிகுந்த வேதனைக்குரியது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும் பா.ஜ.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர்களாகி, இப்படி மாணவ மாணவிகள் மத்தியில் கல்வியைக் காவிமயமாக்கவும், தமிழர்களின் தொன்மை விழாக்களைச் சீரழிக்கவும் வழிவகுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை யாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் இந்த உத்தரவு பா.ஜ.க.வின் பிரச்சாரத்திற்காக பள்ளிக்கூடங்களைப் பயன்படுத்தவும், இளைஞர்களின் உள்ளங்களைத் திசைதிருப்பும் எண்ணத்துடனும் போடப்பட்டுள்ள உத்தரவாகும்.
ஆகவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 16.1.2020 அன்று பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்ற உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் திமுக மாணவரணி சார்பில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீடு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.