பிரதமரின் உரையை கேட்க வரும் 16ம் தேதி விடுமுறையன்று மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வரச் சொல்லவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(டிச.28) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு நல்லாட்சியில் மத்திய அரசு முதலிடம் கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்துதான் இந்த முதலிடத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. இதற்காக உழைத்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஸ்டாலினுக்கு எப்போதும் தமிழக அரசை குறை கூறுவதுதான் வழக்கம். உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.
பிரதமர் மோடியின் உரையை கேட்பதற்கு வரும் 16ம் தேதியன்று பள்ளிக்கு மாணவர்கள் வந்து பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. வீட்டில் டிவி இல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வந்து பிரதமரின் உரையை பார்க்கலாம். மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் என்றுதான் அரசு கூறியுள்ளது. மாணவர்களை கட்டாயமாக வரச் சொல்லவில்லை.
என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, மத்தியில் காங்கிரஸ் இருந்தபோதும், மாநிலத்தில் திமுக அரசு இருந்தபோதும் கொண்டு வரப்பட்டதுதான்.
இந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடுக்கு பயன்படுத்தப்படாது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மக்களை குழப்புகிறார்கள். செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கின்றன. இந்த ஆண்டில் புதிதாக 9 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.