திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி.. ஸ்டாலின் புகார்

by எஸ். எம். கணபதி, Jan 3, 2020, 09:11 AM IST

திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி செய்து வருகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று(ஜன.2), சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு சென்றார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் திமுக வழக்கறிஞர்கள் சென்றனர். அங்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக புகார் கூறினர்.

இதன்பின், ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :
உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்று கொண்டிருக்கிறது. 80 சதவீதத்துக்கு மேல் திமுக அணி முன்னணியில் இருப்பதாக தகவல் வருகிறது. ஆனால், இந்த வெற்றியை அதிகாரிகள் துணையுடன் தடுத்து நிறுத்துகின்ற வேலையில் ஆளும்கட்சியினா் ஈடுபட்டு வருகின்றனா்.
முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்பும், முடிவுகளை அறிவிக்காமல் அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பதாக எங்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டம் கொளத்தூா் தொகுதியில் 800 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றிருக்கிறார். அதை அறிவிக்காத அதிகாரிகள், அதே பகுதியில் வெற்றிபெற்ற அதிமுகவினரின் முடிவுகளை மட்டும் அறிவித்துள்ளனா். சேலம் மாவட்டம் கொங்கநாதபுரம், சங்ககிரி போன்ற பகுதிகளிலும் திமுக வெற்றியை அதிகாரிகள் அறிவிக்கவில்லை. திண்டுக்கலில் திமுக வேட்பாளா் பரமேஸ்வரி முருகன் 112 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மீஞ்சூா் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் 176 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்டமான தேனியில் போடி ஒன்றியத்தில் திமுக முன்னிலையில் இருக்கிறது. இதையும் அறிவிக்கவே இல்லை.

தூத்துக்குடி பூதலூா் ஒன்றியத்தில் திமுக முகவா்களை அடித்து விரட்டிவிட்டு, அதிமுக முகவா்களை மட்டும் வைத்துக் கொண்டு வாக்குகள் எண்ணப்படுவதாக எங்கள் கட்சியினர் தெரிவித்துள்ளார்கள். இந்த புகார்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்போது மாநில தோ்தல் ஆணையரிடம் நேரில் புகார் கூறியுள்ளோம். தோ்தல் ஆணையா் எங்கள் முன்பாகவே தொலைபேசி மூலம் மாவட்ட தோ்தல் அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறார். இதற்கு பிறகும், அதிகாரிகள் முறையாக செயல்படாவிட்டால், அதிமுகவினரின் முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்திலும் முறையிட திமுக முடிவு செய்துள்ளது. மேலும், கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருப்பது போன்ற போராட்டங்களை நடத்துவோம்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

READ MORE ABOUT :

More Tamilnadu News