முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்

by எஸ். எம். கணபதி, Jan 4, 2020, 11:30 AM IST

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை உயிரிழந்தார்.


நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன். பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த இவர், எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது 1980 முதல் 1985 வரை துணை சபாநாயகராக இருந்தார். 1985 முதல் 1989 வரை சபாநாயகராக பணியாற்றினார். இவர் சபாநாயகராக இருந்த காலத்தில், தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக கூறி, அதிரடியாக செயல்பட்டார். எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்.


திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதியில் 1977, 1980, 1984, 1989ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வேட்பாளராக ேபாட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 1989ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக(ஜா) அணி சார்பில் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.வாக இருந்தார்.


ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.இவரது மகன் வழக்கறிஞர் மனோஜ்பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இன்னொரு மகன் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார்.பி.எச். பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்தவர். அவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார்.


போயஸ் கார்டனில் சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றிய காலகட்டத்தில் அதுகுறித்து அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசுவதற்கு பயந்திருந்தனர். ஆனால், அப்போது அதை வரவேற்று வெளிப்படையாக பேசியவர் பி.எச்.பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

Leave a reply