கவுன்சிலர்களை இழுப்பதிலும் திமுகவுடன் மல்லுகட்டும் அதிமுக..

by எஸ். எம். கணபதி, Jan 6, 2020, 14:30 PM IST

மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்காக சுயேச்சை கவுன்சிலர்களை வளைப்பதில் திமுகவுடன் அதிமுக போராடுகிறது. ஆளும்கட்சியாக இருந்தாலும் திமுகவுடன் மல்லுகட்டுகிறது அதிமுக.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் சேர்ந்து அவர்களுக்குள் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதே போல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், தங்களுக்குள் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான மறைமுக தேர்தல் 11ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருந்த போதும் திமுக இந்த முறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மதுரையில் திமுக சார்பில் 92 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள், 5 காங்கிரஸ் கவுன்சிலர்கள் தேர்வாகியுள்ளனர். மேலும், 12 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆசி பெறுவதற்காக நேற்று(ஜன.5) சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் திமுக கவுன்சிலர்கள் இன்று காலை பதவியேற்றவுடன் மொத்தமாக ஓரிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர். ஆளும்கட்சியின் பெரிய கவனிப்புக்கு சிக்கி விடக் கூடாது என்பதற்காக இப்படி செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 19 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக சார்பில் 8 பேரும், மார்க்சிஸ்ட் சார்பில் ஒருவரும் தேர்வாகியுள்ளனர். ஒன்றியத் தலைவரை தேர்வு செய்ய இன்னும் 2 கவுன்சிலர்கள் தேவை.

இந்த ஒன்றியத்தில் அதிமுக சார்பில் 5 பேரும், தேமுதிக ஒருவரும், 4 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.

இந்நிலையில், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற இப்போதே பேரம் பேசினர். இதற்கிடையே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இது முடிந்ததும், மாவட்ட திமுக நிர்வாகிகள் அங்கு வந்து, திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை ஒரு டெம்போ வேனில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனர்.

அதிமுகவினர் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், டெம்போ வேனை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அவர்களை தள்ளி விட்டு, வேனில் கவுன்சிலர்களை கொண்டு சென்று விட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக மற்றும் தேமுதிக கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You'r reading கவுன்சிலர்களை இழுப்பதிலும் திமுகவுடன் மல்லுகட்டும் அதிமுக.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை