ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி திமுக சார்பில் ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 11ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுகவும், திமுகவும் கவுன்சிலர்களை வளைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இருகட்சியினரும் கடத்தல், பணபேரம் என பல வழிமுறைகளை கையாள்கின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை, கரூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தும், தேர்தல் அதிகாரிகள் அதை மாற்றி, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். எனவே, இந்த இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரி திமுக வழக்கறிஞர் நீலகண்டன், கடந்த ஞாயிறன்று நீதிபதி ஆதிகேசவலு முன்பாக கோரிக்கை விடுத்தார். அவர் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் உள்பட பல திமுகவினர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவை இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.