திராவிட இயக்கத்தை சார்ந்த துணிச்சலான நீதிபதி மோகன்.. மு.க.ஸ்டாலின் புகழாராம்

m.k.stalin praises the late justice s.mohan

by எஸ். எம். கணபதி, Jan 8, 2020, 12:38 PM IST

திராவிட இயக்கத்தைச் சார்ந்த நீதிபதி என்று தன்னைத் துணிச்சலாக கூறிக் கொள்ளக்கூடிய ஒருவர் நீதியரசர் மோகன் என்று மறைந்த நீதிபதி மோகனுக்கு மு.க.ஸ்டாலின் புகழாராம் சூட்டினார்.


சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நீதியின் அடையாளமாக மட்டுமின்றி, சமூகநீதியின் அடையாளமாகவும் விளங்கியவர் நீதியரசர் மோகன். கடந்த டிச.22ம் தேதி காலையில் மதுரை செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, நீதியரசர் மோகன், உடல் நலிவுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. விமான நிலையம் செல்லும் முன் அப்பல்லோ மருத்துவமனைக்குத்தான் சென்றேன்.

அவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நானும், டி.ஆர்.பாலுவும் அவரைப் பார்க்க உள்ளே சென்றோம். எங்களைப் பார்த்ததும் என் கையைப் பிடிக்க வேண்டும் என்று முயற்சித்தார். நான் அருகில் சென்று என் கையைக் கொடுத்தேன். அழுத்தமாக பற்றிக் கொண்டார். மூக்கில், வாயில் எல்லாம் குழாய்கள் செருகப்பட்டிருந்ததால் அவரால் பேச இயலவில்லை. “உடல்நிலை விரைவில் சரியாகி விடும். தைரியமாக இருங்கள்” என்று அவரிடம் கூறினோம். உடனே கண் அசைவுகள் மூலம், எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்தார். அப்படிப்பட்ட அவர் இன்று நம்மிடையே இல்லை. திராவிட இயக்கத்தைச் சார்ந்த நீதிபதி என்று தன்னைத் துணிச்சலாக கூறிக் கொள்ளக்கூடிய ஒருவர் நீதியரசர் மோகன்.


2018ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி தலைவர் கலைஞர் அவர்கள் மறைவெய்தியதற்கு பின்னர், அவருக்கு நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் சார்பில் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்கள் நீதியரசர்களை அழைத்து இதே பெரியார் திடலில் தலைவர் கலைஞருக்கு நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் தனது தள்ளாத நிலையிலும் நீதியரசர் வந்து பங்கேற்றுப் பேசிய நிகழ்வை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. நான் அப்போது உங்களைப் போல கீழே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அவர் கலைஞரால்தான் நான் நீதியரசர் ஆனேன் என்று சொன்னார். மேடையில் அமர்ந்திருக்கும் நீதியரசர்கள் அனைவரும் கலைஞரால் உருவாக்கப்பட்டவர்கள் என்று சொன்னார். நீதியரசர்கள் யாரும் அப்படி தைரியமாக, வெளிப்படையாக கூறமாட்டார்கள். பதவிக் காலம் முடிந்த பின்னர் கூட கூறலாம். ஆனால், பதவியில் இருந்த போதே இந்தக் கருத்தைச் சொன்னவர் நமது நீதியரசர் மோகன். 1978ல் இதே பெரியார் திடலில், தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவில் நீதியரசர் வரதராசன், நீதியரசர் மோகன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் பெரியார் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அப்போது, தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் நீதியரசர்கள் பங்கேற்கலாமா? என்ற பெரிய சர்ச்சையே ஏற்பட்டது. அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், தைரியமாக வந்து கலந்து கொண்டவர்தான் நீதியரசர் மோகன். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக அனைத்து உயரங்களையும் தொட்டிருக்கிறார் என்பதை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலரது முகத்தைப் பார்த்தால் பெரிய மகிழ்ச்சி ஏற்படும். அப்படிப்பட்ட முகத்துக்குச் சொந்தக்காரர்களாக இருந்தோரில் ஒருவர் நீதியரசர் மோகன். ஒருமுறை, தலைவர் கலைஞர் அவர்களின் புத்தகத்தை நீதியரசர் மோகன் வெளியிட்டார். அதேபோல நீதியரசர் மோகன் அவர்களின் புத்தகத்தை தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்.

தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, தந்தை பெரியாரின் சமூகநீதி, அறிஞர் அண்ணாவின் மொழிப்பற்று, தலைவர் கலைஞர் அவர்களின் தமிழர் நலன் காக்கும் அக்கறை ஆகிய இந்த மூன்றிலும் பங்கு கொண்டவர் நீதியரசர் மோகன். திராவிட இயக்கத்தைப் பொறுத்த வரை எத்தனையோ மருத்துவர்களை உருவாக்கி இருக்கிறது. ஆசிரியர்களை, பேராசிரியர்களை உருவாக்கி இருக்கிறது. வழக்கறிஞர்களை உருவாக்கி இருக்கிறது. அதுமட்டுமல்ல; நீதியரசர்களையும் உருவாக்கி இருக்கிறது என்றால் அதில் வியப்படைய ஏதுமில்லை. அதற்கு உதாரணமாக நீதியரசர் கோகுல கிருஷ்ணன், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், நீதியரசர் மோகன், நீதியரசர் சிவசுப்பிரமணியன், நீதியரசர் சாமிதுரை என நீண்ட பட்டியலே போடலாம்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு, திடீரென ஒருநாள் இரவு, என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாளை காலை நான் ஒருவரை அனுப்பி வைக்கிறேன். நேரடியாக வந்து விஷயத்தை உங்களிடம் கூறுவார். என்ன என்று கேளுங்கள் என எனக்கு உத்தரவிட்டார். அதன்படி அவரால் அனுப்பி வைக்கப்பட்டவரும் அறிவாலயத்திற்கு வந்தார். வந்தவர் என்ன சொன்னார் தெரியுமா? உங்களைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உங்களது “இமேஜை” உயர்த்தப் போகிறேன். அதற்குத்தான் நீதியரசர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார் என்று சொன்னார். சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

அடுத்த பத்து நிமிடங்களில் நீதியரசர் மோகன் தொலைபேசி மூலமாக எனைத் தொடர்பு கொண்டார். வந்தவர் உங்களைப் பார்த்தாரா, என்ன சொன்னார் என்ற விவரங்களை அக்கறையுடன் விசாரித்தார். என்மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை எண்ணிப் பார்த்து பரவசப் பட்டேன். அவர் இன்று நம்மிடையே இல்லை. அவர் இன்றைக்கு படமாக மாறி இருந்தாலும், நமக்கெல்லாம் பாடமாக மாறி இருக்கிறார். அவர் வழிநின்று, அவர் விட்டுச் சென்றிருக்கும் கொள்கைகளைக் காப்பாற்ற உறுதி எடுக்கும் நிகழ்ச்சியாக இதனைக் கருத வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.




You'r reading திராவிட இயக்கத்தை சார்ந்த துணிச்சலான நீதிபதி மோகன்.. மு.க.ஸ்டாலின் புகழாராம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை