மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, தொழிலாளார் சீர்திருத்தங்கள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்ளிட்டவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதே போல், தொழிலாளர்களின் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் இந்த போராட்டத்துக்கு மத்திய அரசு ஊழியர் சங்கங்களும், வங்கி ஊழியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மோடி-அமித்ஷா அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளால், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் நலிவடையச் செய்யப்பட்டு, மோடியின் முதலாளித்துவ கொள்கைப்படி தனியாருக்கு விற்கப்படுகிறது. இதை எல்லாம் எதிர்த்து நாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எனது ஆதரவு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.