ஈராக் நாட்டிற்கு இப்போது செல்ல வேண்டாம் என்று இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில், அல் அசாத் மற்றும் இர்பில் நகரங்களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எல்லாம் நல்லதுதான். உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களும், ராணுவமும் அமெரிக்காவிடம் உள்ளது.. என்று டிரம்ப் எச்சரிக்கை விடு்த்திருக்கிறார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈராக்கில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் காரணமாக, ஈராக்கிற்கு சாதாரண பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதே போல், ஈராக்கில் உள்ள இந்தியர்கள், அந்நாட்டுக்குள் உள்நாட்டு பயணங்களை தவிர்த்து உஷாராக இருக்க வேண்டும்.
ஈராக்கின் பாக்தாத் மற்றும் எர்பில் நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்கள் வழக்கம் போல் செயல்படும். இந்தியர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தூதரகத்தை அணுகலாம்.
இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.