உள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை, தூத்துக்குடி, கயத்தாறு மறைமுக தேர்தல் முடிவுகள்.. திமுக பல இடங்களில் வெற்றி.

by எஸ். எம். கணபதி, Jan 11, 2020, 20:24 PM IST

தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவின் வசுமதி, கயத்தாறு ஒன்றியத் தலைவராக அ.ம.மு.க.வின் மாணிக்கராஜா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க 243 இடங்களையும், அ.தி.மு.க 214 இடங்களையும் பிடித்துள்ளன. பா.ம.க. 16 இடங்களையும், காங்கிரஸ் 22 இடங்களையும், பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 7 இடங்களையும், தே.மு.தி.க. 3 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களையும் வென்றுள்ளன.

இதே போல், மொத்தம் உள்ள 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க 2,099 இடங்களையும், அ.தி.மு.க 1,781 இடங்களையும் வென்றிருக்கின்றன. பா.ம.க 217, காங்கிரஸ் 131, தே.மு.தி.க. 91, பா.ஜ.க. 85, இந்திய கம்யூனிஸ்ட் 62, மார்க்சிஸ்ட் 33 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், 27 மாவட்ட ஊராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகள் தலா 314, ஊராட்சி துணைத்தலைவர் பதவிகள் 9,624 ஆகியவற்றுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு இவர்களை தேர்வு செய்வார்கள்.

மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி அலுவலகத்திலும், ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக, மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கு காலை 11 மணிக்கு மறைமுக தேர்தல் தொடங்கியது. தஞ்சை மாவட்ட ஊராட்சியில் திமுக 22 கவுன்சிலர்களும், அதிமுக 6 கவுன்சிலர்களும் வென்றுள்ளனர். இதனால், திமுகவைச் சேர்ந்த உஷா போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதே போல், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த வசுமதி அம்பாசேகர், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் அ.ம.மு.க. தென்மண்டல செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா ஆகியோரும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவின் வசந்தா தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றியங்களில் திமுகவே மெஜாரிட்டி கவுன்சிலர்களை வென்றிருக்கிறது. இதனால், அந்த ஒன்றியங்களில் திமுகவினரே தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தா.பேட்டை ஒன்றியத் தலைவராக திமுகவின் சர்மிளாவும், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவராக திமுகவின் ஸ்ரீதரும், முசிறி ஒன்றியத் தலைவராக மாலாவும், தொட்டியம் ஒன்றியத் தலைவராக புனிதா ராணியும், மணிகண்டம் ஒன்றியத் தலைவராக கமலா கருப்பையாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுக, அதிமுக கூட்டணிகளில் அந்தந்த ஒன்றியங்களில் மெஜாரிட்டி இடங்களை பெற்ற கட்சியினரே போட்டியின்றி தலைவராக தேர்வாகி வருகின்றனர்.

இழுபறியாக உள்ள பல இடங்களில் கவுன்சிலர்களை இழுக்கும் பணியும், தேர்தலை தள்ளிப் போடும் வேலைகளும் நடக்கின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கு பிற்பகல் 3 மணிக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோ எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

You'r reading உள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை, தூத்துக்குடி, கயத்தாறு மறைமுக தேர்தல் முடிவுகள்.. திமுக பல இடங்களில் வெற்றி. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை