குடியுரிமை திருத்தச் சட்டத்தை பற்றி போலீசார் பாடம் எடுக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தன. உத்தரப்பிரதேச மாநிலம், மீரட், முசாபர்நகர், லக்னோ போன்ற இடங்களில் கடந்த டிசம்பரில் நடந்த கலவரங்களில் 19 பேர் வரை பலியாகினர்.
இதே போல், டெல்லியில் ஜமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் நுழைந்து மாணவர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பல இடங்களில் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் சீமாபுரி பகுதியில் போராட்டத்தின் போது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஜாமீன் வழங்கி, டெல்லி மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சஞ்சீவ்குமார் மல்ஹோத்ரா உத்தரவு பிறப்பித்தார். கைதானவர்கள் ரூ.20 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான ஒரு நபர் ஜாமீனிலும் விடுவிக்கப்படலாம் என்றும், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இது தவிர, வழக்கத்திற்கு மாறாக ஒரு நிபந்தனையும் விதித்துள்ளார். அதாவது, ஜாமீனில் விடுவிக்கப்படுபவர்கள் வரும் 19ம் தேதியன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சீமாபுரி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். அங்குள்ள அதிகாரிகள் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அவர்களுக்கு விளக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்திருக்கிறார். இது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சமூக ஊடகங்களிலும் இது விமர்சிக்கப்பட்டு வருகிறது.