எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அதிமுகவினர் அதிவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில், வருகின்ற 14ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் தடபுடலாக செய்து வருகின்றனர். நகர் முழுவதும் பதாகைகள் வைத்துள்ளனர். அனைத்து பணிகளையும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் வைரமுத்து ஆகியோரது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் தனித்தனியாக இருந்தபோது ஓ.பி.எஸ். ஆதரவாக செயல்பட்ட கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட சில நிர்வாகிகள் செயல்பட்டனர். அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும் முதல்வருக்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கர் புகைப்படமே பிரதானமாக இடம் பெற்றிருந்தது. மேலும், பன்னீர் செல்வம் ஆதரவு நிர்வாகிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கார்த்திக் தொண்டைமான் வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், அமைச்சர் படம் இடம்பெறாத வகையில் பதாகை வைப்பதுடன், ஒபிஎஸ் அணி சார்பில் தனியாக வரவேற்பு கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி அமைச்சர் விஜயபாஸ்கர் படம் இல்லாமல் புதுகை நகரில் வைக்கப்பட்டது. ஆனால், இதனால் துணை முதல்வர் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். விழாவின்போது இது குறித்து கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்கள், கட்சியிலும் ஆட்சியிலும் உங்கள் அணியினரை ஒதுக்குவதாக புகார் பரவலாக வருகிறதே? அது உண்மையா? என்று கேள்வி எழுப்பினர்.
ஆனால், இதற்கு பதிலளித்திருந்த பன்னீர்செல்வம், அதில் சிறிதும் உண்மையில்லை என்று கூறியிருந்த நிலையில் பன்னீர்செல்வம் அணியினர் வைத்திருந்த பதாகைகள் அகற்றப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்னீர்செல்வம் அணியினர் புறக்கணிக்கப்பட்டு வருவது உறுதியாகி உள்ளது என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.