உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற பலவிதமான காளைமாடு சாகச விளையாட்டுகள் நடைபெறும்.
குறிப்பாக, மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், மறுநாள் பாலமேட்டிலும், 3-ம் நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இதில், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலமானது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒரு குழுவை மதுரை ஐகோர்ட் நியமித்தது. இந்த குழுவில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும், பிரமுகர்களும் இடம் பெற்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையான ஜன.15ல் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினமான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளின்போது காளைகள் முட்டியதில் 96 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு தொடங்கப்பட்டவுடன் வாடிவாசலில் இருந்து வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு பிடி வீரர்கள், திமிறி ஓடும் காளைகளை விரட்டிச் சென்று திமிலை பிடித்து அடக்கினர்.
இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் இடம் பெறுகின்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் 2 கார்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வெளியூர்களில் இருந்து வந்தவண்ணம் உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர். பாதுகாப்புப் பணிகளில் மட்டும் 2000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.