டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் இன்று(ஜன.17) வெளியாக உள்ளது.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டசபை பதவிக்காலம் பிப்.22ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, டெல்லி சட்டசபை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்.8ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. ஜன.21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மறுநாள் மனுக்கள் பரிசீலிக்கப்படும். 24ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசிநாள். வாக்கு எண்ணிக்கை பிப்.11ம் தேதி நடைபெறும்.
இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால், ராகுல்காந்தியும், கெஜ்ரிவாலும் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருந்ததால் கூட்டணி அமையவில்லை. தற்போது டெல்லியில் ஆளும்கட்சியான ஆம் ஆத்மியை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்து வருவதால் அதனுடன் கூட்டணி சேர விரும்பவில்லை.
இந்நிலையில், டெல்லி காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளரான பி.சி.சாக்கோ, கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால் மற்றும் டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்லி காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை இந்த கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனினும், கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடுவது யார் என்று முடிவாகவில்லை. மேலும் சில தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வில் சிக்கல் நீடித்து வருகிறது. எனினும், காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியாகலாம் எனத் தெரிகிறது. இது பற்றி சுபாஷ் சோப்ராவிடம் கேட்ட போது, முதல் பட்டியல் விரைவில் வெளியாகும். நான் தேர்தல் ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியுள்ளதால் போட்டியிடவில்லை என்றார்.