மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு விதிமுறைகள் குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த்ராய் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இக்கூட்டத்தை மேற்குவங்கம் புறக்கணிக்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு(சென்சஸ்), தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆா்) ஆகியவை தயாரிக்கும் பணிகள் மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் இன்று(ஜன.17) ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது.
உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தலைமை வகிக்கவுள்ளார். இதில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநா்கள் பங்கேற்கவுள்ளனா்.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பா் 30ம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதுதொடா்பான நடைமுறைகள் குறித்தும், விதிமுறைகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறினார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி ஏற்கனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக, மத்திய பதிவாளர் ஜெனரலுக்கு மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மேற்கு வங்க தலைமைச் செயலாளரோ அல்லது வேறு எவரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.