மத்திய பட்ஜெட் பிப்.1ல் தாக்கல்.. விவசாயத்துக்கு முன்னுரிமை

by எஸ். எம். கணபதி, Jan 17, 2020, 14:59 PM IST

மத்திய அரசின் பட்ஜெட் வரும் பிப்.1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலாகிறது.
பின்னர், பிப்.1ம் தேதியன்று மத்திய அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டில் இணைக்கப்பட்டு விட்டதால், ரயில்வே திட்டங்களும் ஒரே பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மோடி அரசு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்கு உதவும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் பராமரிப்பு சட்டத்தில் சில கடுமையான பிரிவுகளை நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம். அதாவது, இந்த சட்டத்தின்படி, வேளாண் விளைபொருட்களை வியாபாரிகள் குறிப்பிட்ட அளவுக்குத்தான் சேமித்து வைக்க முடியும். அதிகமாக சேமித்து வைத்தால், பதுக்கி வைத்திருப்பதாக கூறி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், ஒரு பொருள் அதிகமாக உற்பத்தியாகும் போது, வியாபாரிகள் அதை வாங்காதபட்சத்தில் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இதை சரிசெய்வதற்குத்தான் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதே போல், விவசாயிகளுக்கு லாபம் கிட்டும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நடுத்தர மக்களுக்கு சலுகை தரும் வகையில் வருமானவரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


More India News