திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. ஸ்டாலினுடன் அழகிரி சந்திப்பு

by எஸ். எம். கணபதி, Jan 18, 2020, 15:11 PM IST

திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். பின்னர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது, கூட்டணி தர்மத்தை திமுக மீறி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரியும், கே.ஆர்.ராமசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இதை வெளிப்படையாக கூறியிருந்தனர்.
இதையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. மேலும், அழகிரி, ராமசாமி ஆகியோரின் வெளிப்படையான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கூட்டத்தை புறக்கணித்ததாகவும், காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி சேருவதை காலம்தான் தீர்மானிக்கும் என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிஸ் போனால் போகட்டும். அதற்கு வாக்குவங்கியே கிடையாது என்றார். இதற்கு காங்கிரஸ்தரப்பில் கார்த்தி சிதம்பரம், துரைமுருகனுக்கு இந்த கருத்து வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஏன் தோன்றவில்லை? என்று கேட்டார். மாணிக்தாகூர் போன்ற சிலரும் எதிர்கருத்து கூறினர்.
இந்நிலையில், திமுகவுடன் கூட்டணியை தொடரவே அகில இந்திய காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. அதற்காக ஸ்டாலினை சந்தித்து சமாதானப்படுத்த தமிழக தலைவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு ஆகியோர் இன்று(ஜன.18) மதியம் 12 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
சந்திப்புக்கு பின்னர், நிருபர்களுக்கு அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. திமுக, காங்கிரசுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி ஸ்டாலினிடம் பேசினோம். 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும், அதற்கு பின்பும் திமுகவுடன் காங்கிரசின் கூட்டணி தொடரும்.
கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஆரோக்கியமான விவாதம் வந்து போவது இயல்புதான். திமுக கூட்டணியை அதிமுக கூட்டணியுடன் ஒப்பிட முடியாது. எங்கள் கூட்டணி, கொள்கைரீதியான கூட்டணி. முரசொலி பத்திரிகையை துக்ளக் பத்திரிகையுடன் ரஜினிகாந்த் ஒப்பிட்டது தவறு.
இ்வ்வாறு அழகிரி கூறினார். தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் பயப்படுகிறதா என்ற கேள்விக்கு அவர், இந்தியாவில் தனித்து நிற்க எந்த கட்சிக்கும் செல்வாக்கு இல்லை என்றார். காங்கிரஸ் தலைமை, தமிழக காங்கிரசுக்கு கட்டுப்பாடு எதுவும் விதித்துள்ளதா என்று கேட்டதற்கு அவர், காங்கிரஸ் தலைமை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது என்று பதிலளித்தார்.

You'r reading திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. ஸ்டாலினுடன் அழகிரி சந்திப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை