தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சரவை ஆலோசனை..

by எஸ். எம். கணபதி, Jan 20, 2020, 11:01 AM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர். 2020-21ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட், மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கியத் திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை எப்போது நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வுகள், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மே மாதம் இந்த தேர்தல்களை நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடு்த்துள்ளார். இது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


More Tamilnadu News