ரஜினி வீடு அருகே பெரியார் தி.க.வினர் முற்றுகை போராட்டம்

by எஸ். எம். கணபதி, Jan 21, 2020, 12:04 PM IST

பெரியாரை பற்றி ரஜினி அவதூறாக சொன்னதாக கூறி, அவரை கண்டித்து பெரியார் தி.க.வினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழா ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழா மலரை வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த், முதல் மலரை பெற்றுக் கொண்டார். ரஜினி பேசுகையில், கடந்த 1971ம் ஆண்டில் நிர்வாண கோலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டி சிலைகளை செருப்பு மாலை அணிவித்து பெரியார் ஊர்வலம் நடத்தினார். இதை துக்ளக் பத்திரிகை அட்டையில் வெளியிட்டது. அந்த பத்திரிகையை கலைஞர் தடை செய்தார். ஆனால், அதை மீண்டும் அச்சடித்து சோ விற்பனை செய்தார். அது பிளாக்கில் விற்பனையானது என்று சொன்னார்.
ஆனால், பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் நிர்வாண கோலத்தில் ராமர், சீதை சிலைகள் கொண்டு வரப்படவில்லை என்றும், ராமர், சீதை படங்களுக்கு செருப்பு மாலை போடப்படவில்லை என்றும் தி.க., பெரியார் தி.க. போன்ற இயக்கங்கள் மறுப்பு தெரிவித்தன.

பெரியார் குறித்து ரஜினி பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரி, முற்றுகை ேபாராட்டம் நடத்தப் போவதாக பெரியார் தி.க. கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலையில் ரஜினிகாந்த் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியில் அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். அவர்கள், ரஜினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


More Tamilnadu News