ஆட்டுவித்தான் யாரொருவன்.. ரஜினியை இயக்குகிறாரா - ஆடிட்டர் குருமூர்த்தி

by எஸ். எம். கணபதி, Jan 21, 2020, 12:31 PM IST

ரஜினியின் சமீபத்திய பெரியார் பேச்சு எல்லாமே ஆடிட்டர் குருமூர்த்தியின் ஸ்கிரிப்ட் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழா ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழா மலரை வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த், முதல் மலரை பெற்றுக் கொண்டார். ரஜினி பேசுகையில், கடந்த 1971ம் ஆண்டில் நிர்வாண கோலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டி சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து பெரியார் ஊர்வலம் நடத்தினார். இதை பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஆனால், சோ சார் மட்டும் துணிச்சலாக துக்ளக் பத்திரிகை அட்டையில் வெளியிட்டார். அந்த பத்திரிகையை கலைஞர் தடை செய்தார். ஆனால், சோ சார் அதை மீண்டும் அச்சடித்து விற்பனை செய்தார். அது பிளாக்கில் விற்பனையானது என்று சொன்னார்.


ஆனால், பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் நிர்வாண கோலத்தில் ராமர், சீதை சிலைகள் கொண்டு வரப்படவில்லை என்றும், ராமர், சீதை படங்களுக்கு செருப்பு மாலை போடப்படவில்லை என்றும் தி.க., பெரியார் தி.க. போன்ற இயக்கங்கள் மறுப்பு தெரிவித்தன. யாரோ எழுதி கொடுத்ததை பேசும் ரஜினிகாந்த் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று திராவிட இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன.

பெரியார் குறித்து பொய் சொன்னதற்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரி, முற்றுகை ேபாராட்டம் நடத்தப் போவதாக பெரியார் தி.க. கட்சியினர் அறிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், ரஜினி இன்று(ஜன.21) காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், பெரியார் நடத்திய ஊர்வலத்தில் அப்படி நடக்கவே இல்லை என்று சொல்கிறார்கள். இது 2017ம் ஆண்டு வந்த அவுட்லுக் பத்திரிகை. இந்து குரூப் வெளியிடும் பத்திரிகை. இதில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் செருப்பு மாலை போட்டு உடையணியாத ராமர் படம் கொண்டு வரப்பட்டதாக போட்டிருக்கிறார்கள்.
நான் எதுவும் கற்பனையாக சொல்லவில்லை. இல்லாத ஒன்றை பற்றி சொல்லவில்லை. நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொல்கிறார்கள். சாரி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார்.


இந்த சமயத்தில், துக்ளக் ஆசிரியரும், பாஜக ஆதரவு ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினியின் இன்டர்வியூ நடந்து கொண்டிருக்கிறது. பாருங்கள். ரஞ்சனியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது. யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவது தவறு என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அவசரத்தில் அவர் ரஜினியைக் கூட ரஞ்சனி என்று போட்டு விட்டார். அதற்கு பிறகு அதை திருத்தி, ரஜினி என்று இன்னொரு பதிவு போட்டிருக்கிறார்.

ரஜினி, துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி எழுதி கொடுத்ததைத்தான் படித்தார் என்று பெரியாரிஸ்ட்டுகள் கூறி வந்தனர். அதை உண்மையாக்கும் விதமாக இன்று ரஜினியும் அவுட்லுக் பத்திரிகை ஒன்றை கொண்டு வந்து நிருபர்களிடம் காட்டினார். அதே சமயம், ஆடிட்டர் குருமூர்த்தியும் அவசரமாக ட்விட் போட்டுள்ளார்.

ஏற்கனவே, சசிகலாவுக்கு எதிராக நான்தான் ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் நடத்தச் சொன்னேன் என்றும், நீங்க எல்லாம் ஒரு ஆம்பிளையா... என்று ஓ.பி.எஸ்சிடம் கேட்டேன் என்றும் பட்டவர்த்தனமாக பேசியவர் ஆடிட்டர் குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், நான்தான் ரஜினிக்கு ஆன்மீக அரசியலை சொல்லிக் கொடுத்தேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லும் காலமும் விரைவில் வரலாம்.


More Tamilnadu News