இந்தியாவின் 2019-2020 ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்குள் தான் இருக்கும் என்று சர்வதேச நிதி ஆணையம்(ஐ.எம்.எப்) கூறியிருப்பதை பாஜக அமைச்சர்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
சர்வதேச நிதி ஆணையம்(ஐ.எம்.எப்) நேற்று(ஜன.20) வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவின் நடப்பாண்டு (2019-2020) பொருளாதார வளர்ச்சி விகிதம், 4.8 சதவீதமாக குறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. ஐ.எம்.எப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் இருக்கிறார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்திற்குள், அதாவது 4.8 சதவீதமாக குறைந்திருப்பதாக ஐ.எம்.எப் கூறியுள்ளது. இதுவே சில கணக்குகளை சரிகட்டித்தான் வந்திருக்கும் என்று நான் கருதுகிறேன். எனவே, அதற்கும் கீழ் வளர்ச்சி விகிதம் போனால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
ஐ.எம்.எப். தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், தான் முதன்முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குறை கூறியவர். இப்போது வளர்ச்சி விகித புள்ளிவிவரங்களை அறிவித்ததற்காக அவரும், ஐ.எம்.எப். அமைப்பும், அரசாங்க அமைச்சர்களின் தாக்குதல்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.