பெரியார் குறித்து ரஜினி பேசியது பொய் என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி, பெரியார் தி.க.வினர் இன்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துக்ளக் விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசுகையில், 1971ம் ஆண்டில் நிர்வாண கோலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா பிராட்டி சிலைகளுக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் நடத்தினார். இதை பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஆனால், சோ சார் மட்டும் துணிச்சலாக துக்ளக் பத்திரிகை அட்டையில் அதை வெளியிட்டார். அந்த பத்திரிகையை கலைஞர் தடை செய்தார். ஆனால், சோ சார் அதை மீண்டும் அச்சடித்து விற்பனை செய்தார். அது பிளாக்கில் விற்பனையானது என்று சொன்னார்.
ஆனால், பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் ராமர், சீதை படங்களுக்கு செருப்பு மாலை போடப்படவில்லை என்றும், பொய் சொல்லும் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் தி.க., பெரியார் தி.க. போன்ற இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன.
அதே சமயம், தான் சொன்னது கற்பனையானது அல்ல என்றும், இல்லாததை சொல்லாததால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ரஜினி பேட்டியளித்தார். இதையடுத்து, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதேபோல், இன்றும் பெரியார் தி.க.வினர் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரஜினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வரலாறு தெரியாமல் ரஜினி உளறுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். பெரியாரை இழிவுபடுத்தி ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.