குடியுரிமை சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

by எஸ். எம். கணபதி, Jan 22, 2020, 12:57 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கடந்த டிசம்பரில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து இங்கு வசிக்கும் இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மட்டும் இதில் இடம் பெறவில்லை. அதனால், மதரீதியாக இந்த சட்டம் அமைந்துள்ளதால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இது வரை 144 மனுக்கள் தாக்கலாகியுள்ளன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று(ஜன.22) விசாரணைக்கு வந்தது. அப்போது, அசாம் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் வாதாடினார். அவர் கூறியதாவது:

இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்து, தள்ளி வைக்கப்பட்ட பின்னர் மட்டுமே சுமார் 40 ஆயிரம் பேர் அசாம் மாநிலத்திற்குள் குடியேறியுள்ளனர். குடியுரிமை வாங்குவதற்காகவே அவர்கள் அவசர, அவசரமாக வந்துள்ளனர். எனவே, சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்காவிட்டால், மாநிலத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி, சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க முடியாது, மத்திய அரசின் பதிலை கேட்ட பின்புதான் முடிவெடுக்க முடியும் என்றார். அதன்பின், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலைப் பார்த்து, அசாம் மாநிலத்தைப் பொறுத்தமட்டிலும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய எவ்வளவு நாளாகும்? என்று கேட்டார். இதை கேட்ட கே.கே.வேணுகோபால், மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.

அப்போது, மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உ.பி.யில் ஏற்கனவே குடியுரிமை வழங்கத் தொடங்கி விட்டார்கள். எனவே, உடனடியாக வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார். மற்றொரு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.

அட்டர்னி ஜெனரல் வாதாடுகையில், முக்கியமான நடைமுறைகள் குறித்த வாதங்களின் போது ரகசிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதன்பின்னர், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பது குறித்தும் ஆய்வு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்து, விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் மறுத்தனர்.


More India News