குடியுரிமை சட்டத்திற்கு எதிரான 144 மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

by எஸ். எம். கணபதி, Jan 22, 2020, 09:07 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை நடத்துகிறது.

மத்திய பாஜக அரசு கடந்த டிசம்பரில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து இங்கு வசிக்கும் இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மட்டும் இதில் இடம் பெறவில்லை. அதனால், மதரீதியாக இந்த சட்டம் அமைந்துள்ளதால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. மேலும், பல ஐகோர்ட்களிலும் மனுக்கள் தாக்கலாகின.
இந்த வழக்கு கடந்த மாதம் 18ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஐகோர்ட்களில் தொடரப்பட்ட மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று மத்திய அரசு கோரியது. இதைத் தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த 144 மனுக்கள், இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன.


More India News