டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் எப்படி முறைகேடு நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முறைகேடாக தேர்வு எழுதிய 99 பேர், இடைத்தரகர்கள், உடந்தையாக இருந்த தேர்வு அலுவலர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி நடத்திய விசாரணையில், சில இடைத்தரகர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் ரகசிய கூட்டு வைத்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 99 பேர் மட்டும் இடைத்தரகர்கள் சொன்னபடி ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடைத்தரகர்கள் ஒரு பேனாவை அளித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு எழுதினால், விடைகளை எழுதிய சில மணி நேரத்தில் அவை மறைந்து விடும்.
இப்படி அழிந்து விட்ட விடைத்தாள்களில், தேர்வு அலுவலர்களின் துணையுடன் இடைத்தரகர்கள் சரியான விடைகளை எழுதியிருக்கிறார்கள். இப்படியாக 52 பேரின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்ததும் தெரிய வந்துள்ளது. அந்த 52 பேரில் 39 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளனர்.
இதையடுத்து, சில முக்கிய முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் எடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
இடைத்தரகர்கள் உதவியுடன் தேர்வு எழுதிய 99 பேரின் தேர்வும் ரத்து செய்யப்படுவதுடன், வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலில் முதல் 100க்குள் வந்துள்ள 39 பேருக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இடைத்தரகர்கள், அவர்களின் மூலம் தேர்வு எழுதிய 99 பேர், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு முழுவதையும் ரத்து செய்யாமல், சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.
இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்கள் ஒட்டுமொத்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று கோரி வருகின்றனர்.