குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பிப்.2 முதல் கையெழுத்து இயக்கம்.. திமுக கூட்டணி தீர்மானம்.

by எஸ். எம். கணபதி, Jan 24, 2020, 13:24 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.பி.ஆர். பணிகளை நிறுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வைகோ, கே.எஸ்.அழகிரி, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மத அடிப்படையில், நாட்டைப் பிளவுபடுத்தும் மனப்பான்மையுடன், “குடியுரிமைத் திருத்தச் சட்டம்(CAA), தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு(NRC) ஆகியவற்றை மக்கள் மீது திணித்து, நாடு சந்தித்து வரும் பொருளாதாரச் சீரழிவுகளில் இருந்து தேசிய அளவில் கவனத்தைத் திசை திருப்பவும் - தனது பிற்போக்கு அடிப்படைவாத சித்தாத்தத்தை நிறைவேற்றவும் மத்திய பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும், பேட்டிகளிலும் “தேசியக் குடிமக்கள் பதிவேட்டை” (NRC) தயாரித்தே தீருவோம் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதை ஆமோதித்த பிரதமரும் இப்போது, “தேசிய மக்கள் தொகை பதிவேடு” (NPR) மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று கூறி நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA) எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற மாட்டோம்”என்று அதிகார ஆதிக்க எண்ணத்துடன் பேசி வருகிறார் உள்துறை அமைச்சர். “தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் திட்டம் இல்லை”என்று மறைத்து வருகிறார் பிரதமர்.

தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்க 1) பெயர், 2) தந்தை பெயர், 3) தாய் பெயர், 4) பாலினம், 5) பிறந்த தேதி, 6) பிறந்த இடம், 7) தற்காலிக, நிரந்தர வீட்டு முகவரி, 8) திருமண விவரம் 9) பெற்றோர் பிறந்த தேதி மற்றும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இந்த தகவல்கள் “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு” (NPR) தயாரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள “NPR கையேடு (Manual)” படிவத்திலும் கேள்விகளாக கேட்கப்பட்டு - கட்டாயமாக சேகரிக்கப்படுகின்றன. “கணக்கெடுப்பின் போது ஆவண ஆதாரங்கள் கொடுக்க வேண்டியதில்லை” என்று மத்திய அரசின் விளம்பரங்களிலும், மத்திய அமைச்சர்களும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். ஆனால் NPR Manual-ல் “பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுக்கு பத்து ஆவணங்கள் வரை மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் சேகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தாய், தந்தையரின் பிறந்த தேதி உள்பட சேகரிக்க வேண்டிய தகவலில் பிறந்த தேதி மிக முக்கியமானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. “பிறந்த தேதியில் குழப்பம் இருந்தால் அதுபற்றி விசாரணை நடத்த அவர்களின் பண்டிகைகள் பற்றி விசாரிக்கலாம் என்று கூறி சுதந்திர தினம், குடியரசு தினம் தவிர 32 பண்டிகைகள் NPR Manual-ல் இடம் பெற்றுள்ளது. அதில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் பண்டிகைகள் ஏதும் இடம் பெறாதது, “குடிமக்களை சந்தேகத்திற்குரியவர்களாக (Doubtful) பதிவு செய்யலாம்” என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், “தகவல் அளிக்காதோர் மீது வழக்குப் போடும் அதிகாரம்” ஆகியவை அனைத்தும் நேர்மையான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அறிகுறிகளாக இல்லை.
ஆகவே, வெளியிடப்பட்டுள்ள “NPR Manual” முழுக்க முழுக்க தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கவே என்ற அச்சத்தை நிரூபிக்கும் வகையிலேயே, மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு குடிமகனும் “நான் இந்த நாட்டுக் குடிமகன்” என்று, “க்யூ”வரிசையில் நின்று, கூறிட வேண்டிய நெருக்கடியை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ளது என்றால் - இதற்கு முழு முதல் காரணம் மாநிலங்களவையில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க. எம்.பி.க்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்ததே!

ஆனால் ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விட்டு - “தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (NPR) நடத்துவதில் சிறுபான்மையினர் மத்தியில் ஒரு பொய்யான அச்சத்தை எதிர்க்கட்சியினர் ஏற்படுத்துகிறார்கள்” என்று கூறி, முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் கூட்டுக்குழுக்களில் எல்லாம் பங்கேற்றிருந்த அ.தி.மு.க உறுப்பினர்கள், இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை குறித்தோ, இரட்டைக் குடியுரிமை குறித்தோ எதுவுமே பேசாமல் வாய்மூடி இருந்தனர்.
குடியுரிமை கேட்டு இலங்கைத் தமிழர் தொடர்ந்த வழக்கில் “இந்தியாவில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது”என்று உயர்நீதிமன்றத்திலேயே கூறிவிட்டு - இப்போது பா.ஜ.க.வுக்குத் துணையாக வாக்களித்த துரோகத்தை மறைக்க, இந்திய மற்றும் இலங்கைக் குடியுரிமைச் சட்டங்களில் இல்லாத “இரட்டைக் குடியுரிமையை கோரியுள்ளோம்” என்று, பொறுப்பற்ற முறையில் முதலமைச்சரும் - அ.தி.மு.க அமைச்சர்களும் தொடர்ந்து கடைந்தெடுத்த பொய்யை சொல்லி வருகிறார்கள்.

தங்கள் மக்களைக் காப்பாற்ற கேரள மாநிலம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றங்கள் இன்னும் சில நாட்களில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறது.
“என்.பி.ஆர் எங்களுக்கு வேண்டாம்” என்று கேரள அமைச்சரவை தீர்மானமே போட்டுவிட்டது. ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”எனக் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை அனுமதித்து, விவாதம் நடத்தக்கூட அ.தி.மு.க அரசு டெல்லிக்குப் பயந்து, முன்வரவில்லை. மாநில அரசின் உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகுவைத்து, “மண்டியிட்டு” சரணாகதி அடைந்துவிட்ட அ.தி.மு.க ஆட்சியின் நோக்கையும் போக்கையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

“தமிழ்நாட்டில் என்.பி.ஆர்-ஐ அனுமதிக்க மாட்டோம்” என்று முதலமைச்சர் பழனிச்சாமி அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி - தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இத்துடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுமானால், அதுகுறித்து, எவ்வித தகவல்களையும் அளிக்க வேண்டாமென பொதுமக்களை அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், 2020 பிப்ரவரி 2ம் தேதி (ஞாயிறுக்கிழமை) முதல் பிப்ரவரி 8ம் தேதி (சனிக்கிழமை) வரை “கையெழுத்து இயக்கம்” நடத்திடுவது என்றும்; அப்படிப் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து அளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

You'r reading குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பிப்.2 முதல் கையெழுத்து இயக்கம்.. திமுக கூட்டணி தீர்மானம். Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை