டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு.. 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு..

by எஸ். எம். கணபதி, Jan 24, 2020, 14:15 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சில இடைத்தரகர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் ரகசிய கூட்டு வைத்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 99 பேர் மட்டும் இடைத்தரகர்கள் கூறியபடி, ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடைத்தரகர்கள் ஒரு பேனாவை அளித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு எழுதினால், விடைகளை எழுதிய சில மணி நேரத்தில் அவை மறைந்து விடும்.

இப்படி அழிந்து விட்ட விடைத்தாள்களில், தேர்வு அலுவலர்களின் துணையுடன் இடைத்தரகர்கள் சரியான விடைகளை எழுதியிருக்கிறார்கள். இப்படியாக 52 பேரின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்ததும் தெரிய வந்துள்ளது. அந்த 52 பேரில் 39 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளனர்.

இதையடுத்து, ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் மீது இபிகோ பிரிவுகள் 120பி, 420, 469, 467, 466 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை தாசில்தார் வீரராஜ் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 12 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு ஓஎம்ஆர்(OMR) விடைத்தாள் தயாரிக்கும் ஒப்பந்ததாரரும் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாக குரூப்4 தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த வேண்டுமென்று விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், முறைகேடாக தேர்வு எழுதியவர்களின் ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையில் முறைகேடுகளில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருந்தால், தேர்வு ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply