ஜெயலலிதா இருந்திருந்தாலும் சசிகலா சிறையில்தான் இருப்பார்.. அமைச்சரின் அடுத்த சர்ச்சை

by எஸ். எம். கணபதி, Jan 26, 2020, 14:09 PM IST

அம்மா(ஜெயலலிதா) இப்போது இருந்திருந்தாலும் சசிகலா, சிறையில்தான் இருந்திருப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவர் விரைவில் வர வேண்டும். இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பது எனது விருப்பம். அம்மாவுடன்(ஜெயலலிதா) 30 ஆண்டு காலம் பயணித்தவர். அவரது கஷ்டங்களிலும், நஷ்டங்களிலும் பங்கெடுத்தவர்.

ஆகவே, அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர் சிறையில் இருப்பது என்னை போன்றவர்களுக்கு வேதனை அளிக்கிறது. திமுகவின் பழிவாங்கும் பொய் வழக்கினால்தான் அவர் சிறையில் இருக்கிறார். அம்மா(ஜெயலலிதா) இப்போது இருந்தாலும் இதே நிலைதான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும். சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வருவது என்னை போன்றவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கும்.
இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து ஏதாவது பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். லேடியா, மோடியா என்று பாஜகவை எதிர்த்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரால் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியோ, மோடி எங்க டாடி என்று பேசினார். சமீபத்தில் கூட, அண்ணாவே எம்.ஜி.ஆரால்தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார் என்றார்.

அதே போல், பெரியாரை மட்டம் தட்டும் வகையில் ரஜினி பேசியது திராவிட இயக்கங்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட, தான் இந்த நிலைக்கு வந்தது பெரியாரால்தான் என்றும், ரஜினி அப்படி பேசியிருக்கக் கூடாது என்றும் கூறினார்.

ஆனால், ராஜேந்திர பாலாஜியோ, ரஜினி பேசியதில் என்ன தவறு? என்று கேட்டதுடன், ரஜினிக்கு எதிராக பேசியவர்களை பார்த்து கொண்டு அவரது ரசிகர்கள் ஏன் சும்மா இருக்கிறார்கள் என்று தூண்டியும் விட்டுப் பார்த்தார். இதெல்லாம் தற்போது அதிமுக மூத்த தலைவர்களிடையே எரிச்சலை ஊட்டியுள்ளது.


Leave a reply