ஆந்திராவில் சட்டமேலவையை நிரந்தரமாக கலைக்க ஜெகன் அரசால் முடியாது என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி புரிந்த போது, புதிய தலைநகர் அமராவதியை உருவாக்க பிரம்மாண்ட திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினார். தற்போது அந்த திட்டத்தை ரத்து செய்யவும், 3 தலைநகர்களை உருவாக்கவும் 2 சட்டமசோதாக்களை ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு சட்டசபையில் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, அந்த மசோதாக்கள், சட்டமேலவைக்கு அனுப்பப்பட்டன. சட்டமேலவையில் தெலுங்குதேசம் உறுப்பினர்கள்தான் மெஜாரிட்டியாக உள்ளனர். மேலவை தலைவரான எம்.ஏ.ஷெரீப் அந்த கட்சியைச் சேர்ந்தவர். இதனால், 2 மசோதாக்களையும் ஆளும்கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை.
இதனால், ஜெகன்மோகன் கடும் கோபமடைந்தார். சட்டமேலவையை கலைத்து விட முடிவு செய்தார். ஆந்திராவுக்கு சட்டமேலவையே தேவையில்லை என்றும் அதை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற பரிசீலிப்போம் என்றும் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போது, சட்டமேலவையை ரத்து செய்ய அப்போதைய முதல்வர் என்.டி.ராமாராவ், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அதை அப்போது மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதற்கு பிறகு, ராஜீவ்காந்தி காலத்தில் சில காரணங்களை சொல்லியே மேலவை கலைக்கப்பட்டது. எனவே, மத்திய அரசின் உதவியில்லாமல் சட்டமேலவையை ஜெகன் அரசு ரத்து செய்ய முடியாது. மேலவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றினாலும் அதற்கு சரியான காரணங்கள் கூறப்பட வேண்டும். மேலும், மத்திய அரசு அதை ஏற்க வேண்டும். தற்போதுள்ள மத்திய அரசு அதை ஏற்காது. அப்படியே ஏற்றாலும் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்குள் ஜெகன் ஆட்சிக்காலமே முடிந்து விடும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.