அமராவதி விவகாரம்.. ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன் முடிவு..

by எஸ். எம். கணபதி, Jan 26, 2020, 14:02 PM IST

ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு யோசித்து வருகிறது.

ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியுற்றது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக, தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம்(சிஆர்டிஏ) ஏற்படுத்தப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாக சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெகன் அரசு, அமராவதி திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது. புதிதாக 3 தலைநகர்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதன்படி, அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும். இந்த மூன்றுமே தலைநகர்களாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அமராவதி திட்டத்தை ரத்து செய்யவும், 3 தலைநகர் உருவாக்கவும் 2 சட்டமசோதாக்களை ஜெகன் அரசு சட்டசபையில் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, அந்த மசோதாக்கள், சட்டமேலவைக்கு அனுப்பப்பட்டன. சட்டமேலவையில் தெலுங்குதேசம் உறுப்பினர்கள்தான் மெஜாரிட்டியாக உள்ளனர். மேலவை தலைவரான எம்.ஏ.ஷெரீப் அந்த கட்சியைச் சேர்ந்தவர். இதனால், 2 மசோதாக்களையும் ஆளும்கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. அப்படி நிறைவேற்றாமல் திருப்பி அனுப்பினால், சட்டசபையில் மீண்டும் அதை வலியுறுத்தி நிறைவேற்றலாம்.

ஆனால், மேலவை தலைவர் எம்.ஏ.ஷெரீப் அப்படி செய்யாமல், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த 2 மசோதாக்களையும் தேர்வுக் குழு ஆய்வுக்கு அனுப்பினார். அந்த குழுவில் பரிசீலித்து மேலவைக்கு திருப்பி வருவதற்கு பல நாட்களாகும்.

இதனால், முதலமைச்சர் ஜெகன்மோகன் கடும்கோபம் அடைந்தார். இதையடுத்து, சட்டசபையில் நேற்று(ஜன.23) அவர் கூறியதாவது:
சட்டமேலவை தலைவர் அந்த மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியது விதிகளுக்கு முரணானது. மக்கள் நலனுக்காக எடுக்கப்படும் நல்ல முடிவுகளையும், சட்டங்களையும் மெஜாரிட்டி அரசால் நிறைவேற்ற விடாமல் செய்ய முடியுமா? சட்டத்தின் மீது ஆலோசனைகளை கூறுவதற்குத்தான் சட்டமேலவை.
நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் மட்டுமே சட்டமேலவை உள்ளது. மேலவை இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. இந்த மேலவைக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி செலவாகிறது. எனவே, மேலவை நமக்கு தேவையா என்று யோசிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இது பற்றி, வரும் 27ம் தேதி நாம் முடிவு செய்வோம்.
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

எனவே, வரும் 27ம் தேதியே சட்டமேலவையை கலைப்பதற்கான மசோதா, சட்டமன்றத்தில் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது நடிகை வெண்ணிறை ஆடை நிர்மலாவுக்கும் மேலவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வழங்கினார். வெண்ணிற ஆடை நிர்மலா ஏற்கனவே கடனாளியாகி திவால் நோட்டீஸ் கொடுத்திருந்தார். அப்படி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவார்கள். அதனடிப்படையில், நிர்மலா போட்டியை எதிர்த்து வழக்கு போடப்பட்டது. இதற்கு பின்னர், எம்.ஜி.ஆர் சட்டமேலவையை கலைக்கும் முடிவுக்கு வந்தார். அதன்படி, அந்த அவை கலைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் சட்டமேலவை கிடையாது.

You'r reading அமராவதி விவகாரம்.. ஆந்திர சட்டமேலவையை கலைக்க ஜெகன் முடிவு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை