டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..மறு தேர்வு நடத்த திட்டம்

Tnpsc may conduct fresh exam for group 4

by எஸ். எம். கணபதி, Jan 29, 2020, 09:36 AM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இது வரை 14 பேர் கைதாகியுள்ளனர். பல மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வருவதால், குரூப் 4 பணிகளுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை நடக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சில இடைத்தரகர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் ரகசிய கூட்டு வைத்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 99 பேர் மட்டும் இடைத்தரகர்கள் கூறியபடி, ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடைத்தரகர்கள் ஒரு பேனாவை அளித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு எழுதினால், விடைகளை எழுதிய சில மணி நேரத்தில் அவை மறைந்து விடும்.இப்படி அழிந்து விட்ட விடைத்தாள்களில், தேர்வு அலுவலர்களின் துணையுடன் இடைத்தரகர்கள் சரியான விடைகளை எழுதியிருக்கிறார்கள். இப்படியாக 99 பேரின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்ததும் தெரிய வந்துள்ளது. அந்த 99 பேரில் 39 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளனர்.

இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து, தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே 12 பேர் கைதாகி இருந்த நிலையில், முறைகேடாக தேர்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(25), கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜ்(31) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால், கைது எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
விக்கியும், சிவராஜும், இடைத்தரகரிடம் தலா ஏழரை லட்சம் ரூபாய் கொடுத்து குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். சிவராஜ் தேர்வில் 300-க்கு 258 மதிப்பெண் எடுத்துள்ளார். மாற்றுத்திறனாளியான இவர் அரசு வேலை கிடைத்தால் வரன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முறைகேடாக தேர்ச்சி பெற முயன்றிருக்கிறார். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர், என்.எல்.சி. நிறுவனத்தில் அப்பரன்டீஸ் பயிற்சி முடித்து விட்டு, சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஏற்கனவே தேர்வு முறைகேடு செய்ததாக இந்த வழக்கில் கைதான சீனிவாசனும், சிவராஜும் உறவினர்களாவார்கள். சீனிவாசனும் தேர்வை முறைகேடாக எழுதியதோடு, இடைத்தரகராகவும் செயல்பட்டிருக்கிறார்.

கைதான விக்கி என்ற விக்னேஷ், தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்து விட்டு, சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார். மேலும், தந்தை தண்டபாணியின் சிமென்ட் கடைக்கு உதவியாக இருந்துள்ளார். அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டுமென்று ஆசைப்பட்டு, இடைத்தரகரிடம் ஏழரை லட்சம் ரூபாய் கொடுத்து ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முறைகேடாக மதிப்பெண் பெற்று மாட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளை நேற்று சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு வரவழைத்து சி.பி.சி.ஐ.டி பிரிவு டிஜிபி ஜாபர்சேட் ஆலோசனை நடத்தினார். குரூப்4 தேர்வு முறைகேடு பல மாவட்டங்களில் விரிந்துள்ளதாக தெரிய வருவதால், குரூப் 4 தேர்வை முழுவதுமாக ரத்து செய்து, மறுதேர்வு நடத்துவது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

You'r reading டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..மறு தேர்வு நடத்த திட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை