ரஜினிக்கு எதிராக ரூ.66 லட்சம் அபராதம் விதிக்கக் கோரிய வழக்கை வருமான வரித் துறை வாபஸ் பெற்றது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005ம் ஆண்டு வரையான நிதியாண்டுகளில் வருமானக் கணக்குகளை முறையாக காட்டவில்லை என்று கூறி, 3 நிதியாண்டுகளுக்கு சேர்த்தும் 66 லட்சத்து 22,436 ரூபாய் அபராதம் விதித்து வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ரஜினி தொடர்ந்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில், 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு பிறகு வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. தற்போது இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகை உள்ள விவகாரங்களில் வழக்கு தொடர்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவதற்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, வருமான வரித்துறை சுற்றறிக்கையைத் தாக்கல் செய்தார்.இதன் அடிப்படையில் ரஜினிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப்பெற வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்து வருமானவரித் துறை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.