நாடு முழுவதும் பொதுத் துறை வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. சென்னையில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். கடைசியாக போடப்பட்ட ஒப்பந்தம் 2017ம் ஆண்டு முடிவுற்றது. இதையடுத்து, விலைவாசி உயர்வுக்கேற்ப புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக ஜன.31(இன்று) தேதியும், பிப்ரவரி 1ம் தேதியும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தன.
இதனால், ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளில் பணபரிவர்த்தனை, காசோலை மாற்றம் உள்ளிட்ட பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை மாநகரில் மட்டும் காசோலை பரிவர்த்தனை மையத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சுமார் 16 லட்சம் காசோலைகள் தேங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் எஸ்பிஐ, இந்தியன் பேங்க் உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்கள், பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தங்களுடைய 12 அம்சக் கோரிக்கைகளையும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.