மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பல்வேறு தலைவர்கள் மீதும், விவசாயிகள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென்று முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. துணிச்சல்மிக்கது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர். முதல்வரின் அறிவிப்பு இந்த போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் மாபெரும் பேரணி உள்பட பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல வழக்குகளையும் தலைவர்கள் எதிர்கொண்டுள்ளனர். எனவே இந்த வெற்றியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும் பங்கு இருக்கிறது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்பிற்கும் பல சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்களை போக்கி இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தெளிவான கொள்கை முடிவாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
ஏனெனில், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள் கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்குண்டான அறிவிப்பு வெளியாகி இருந்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் வேளாண்மையை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் அமைக்க முடியாது. ஆகவே, இந்த அறிவிப்பு முதல்வரின் அறிவிப்புக்கு முரண்படுகிறது. ஆகவே முழுமையான வேளாண் மண்டலம் அமையப்பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
எப்போது முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டாரோ அப்போதே இதற்காக நடைபெற்ற போராட்டங்கள் நியாயமானவை என்பதை முதல்வர் ஏற்கிறார் என்று பொருள். ஆகவே, காவிரி டெல்டாவை பாதுகாக்கும் போராட்டங்களை மேற்கொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட பல்வேறு தலைவர்கள் மீதும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீதும் ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் அனைத்தையுமே தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தெகலான் பாகவி கூறியுள்ளார்.