ஆம் ஆத்மி வெற்றியால் காங்கிரசுக்கு என்ன லாபம்? பிரணாப் மகள் கேள்வி.. சிதம்பரத்திற்கு எதிர்ப்பு

by எஸ். எம். கணபதி, Feb 12, 2020, 13:24 PM IST

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? என்று ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகளும், மகிளாக காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. வெற்று கோஷங்கள், மக்களை ஏமாற்றும் வேலைகள் எல்லாம் தோல்வியடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து டெல்லியில் வாழும் மக்கள், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியையும், மதவாத அரசியலையும் தோற்கடித்துள்ளனர். வரும் ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ள டெல்லி மக்களை நான் வணங்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும், டெல்லி மகிளா காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

மிகவும் மரியாதையுடன் நான் கேட்க விரும்புகிறேன். பாஜகவை தோற்கடிக்கும் வேலையை நாம் மாநில கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டோமா? அப்படி இல்லை என்றால், நமது தோல்வியைப் பற்றி வருத்தப்படாமல், ஆம் ஆத்மி வெற்றியை நாம் எதற்காக கொண்டாட வேண்டும்? ஆம் என்றால், நமது மாநில காங்கிரஸ் கமிட்டிகளை மூடி விடலாமே? டெல்லியில் நாம் மிக மோசமாக தோற்று விட்டோம். இதுதான் நாம் செயல்படுவதற்கான நேரம். கட்சியில் முடிவெடுப்பதற்கு மிக நீண்ட காலதாமதம், சரியான கொள்கைகளை வகுக்காதது, மாநில அளவில் ஒற்றுமை இல்லாதது, ஊக்கமில்லாத தொண்டர்கள், எல்லா விஷயங்களிலும் கீழ்மட்ட அளவில் தொடர்பு இல்லாதது போன்ற காரணங்களால் தோற்றுள்ளோம். இதில், நானும் பங்கு என்ற விதத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று கொள்கிறேன்.
இவ்வாறு ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியிருக்கிறார்.

இவ்வாறு ஷர்மிஸ்தா வெளிப்படையாக ட்விட் செய்ததற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஷர்மிஸ்தாவுக்கு உண்மையான அக்கறை இருந்தால், அவர் சோனியாவை நேரில் சந்தித்தோ அல்லது கடிதத்தின் மூலமாகவோ தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். மாறாக, அவர் இப்படி பதிவிட்டது, பாஜகவின் தோல்வியை மறைப்பதற்கு உதவும் வகையில் உள்ளது. இப்படி மறைமுகமாக பாஜகவுக்கு உதவுபவர்களால்தான் கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. கட்சியில் உறுதியான தலைமையும், உறுதியான நடவடிக்கைகளும் இருந்தால்தான் அதிருப்தியாளர்களை ஒடுக்கி கட்சியை வளர்க்க முடியும் என்றார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை