அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி.. பட்ஜெட்டில் அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Feb 14, 2020, 18:05 PM IST

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் இன்று(பிப்.14) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது முத்திரை தாள் வரி ஒரு சதவீதமாக உள்ளது. இது 0.25 சதவீதமாக குறைக்கப்படும். அதே சமயம், குறைந்தபட்சமாக ரூ.5000 வசூலிக்கப்படும். இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி, இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.500 கோடியும், பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்கும் திட்டத்திற்கு ரூ.5439 கோடியும், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.5,500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கப்படும். இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ.12,301 கோடியும், நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடியும், போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடியும், எரிசக்தி துறைக்கு ரூ.20,115 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ரூ.966 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.5,052 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடியும், தொழில்துறைக்கு ரூ.2,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


Leave a reply