இந்த ஆண்டில் புதிதாக 10,276 சீருடைப் பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று(பிப்.14) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
சேலம் புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். திருநெல்வேலி கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
தமிழக மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.375 கோடியும், கீழடியில் கிடைக்கும் பொருள்களை வைக்கும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடியும், உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
906 குளங்கள், 183 அணைக்கட்டுகள் சீரமைத்தல், 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்க ரூ.649 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தப்படும் மண்டலங்கள் அமைக்கப்படும். கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த ஆண்டில் புதிதாக 10,276 சீருடைப் பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.