மத்திய அமைச்சரிடம் என்ன கடிதம் கொடுத்தீர்கள்? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

by எஸ். எம். கணபதி, Feb 15, 2020, 10:09 AM IST

மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி அவர்கள் அறிவிக்காவிட்டால், நான் அந்த கடிதத்தை வெளியிடுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சட்டசபை முடிந்ததும் வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு :
இன்று சுப்ரீம் கோர்ட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு விசாரிக்கப்பட்டது. அதில் ஒருவரான நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். அவர் 196 நிமிடம் பட்ஜெட்டை வாசித்துள்ளார். மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த பட்ஜெட்டை 159 நிமிடம் வாசித்தார். மத்திய பாஜக அரசை, அதிமுக அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

பட்ஜெட்டில் 3ம் பக்கத்தில் நிதியமைச்சர் ஒரு தகவலை கூறியிருக்கிறார். படிக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நீடிக்காது, ஆட்சி மாறிவிடும் என்றெல்லாம் கூறினார்கள் என்று வாசித்திருக்கிறார். அதாவது, அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா மறைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம்தான் இந்த அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்று தியானம் செய்தார், நீதிமன்றம் சென்றார். அதையே இப்போது அவர் வாசித்திருக்கிறார்.

அவர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் அவருடைய 10வது பட்ஜெட். அதாவது, யாருக்கும் பத்தாத, எதற்கும் பத்தாத பட்ஜெட் ஆக இருக்கிறது. இது அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட்.

திமுக ஆட்சியில் இருக்கும்போது அரசின் கடன் சுமை ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அதிமுக அரசில் இது அதிகரித்து கொண்டே வந்து தற்போது 4 லட்சம் கோடியாக உள்ளது. ஒரு தமிழனின் தலையில் 57,000 ரூபாய் என்ற அளவில் கடன் சுமை இருக்கிறது.

அதுமட்டுமின்றி, அதிமுக அரசில் தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை ஊழல், லஞ்சம் மூழ்கியிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் எந்த தொலைநோக்குத் திட்டமும் வளர்ச்சித் திட்டமும் இல்லை. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் முதலமைச்சரின் துறைகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்று புரியவில்லை.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தற்போதும் அங்கு எண்ணெய் கிணறுகள் உள்ளன. அவை மூடப்படுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதே போல், அமைச்சர் ஜெயக்குமார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, ஒரு கடிதம் கொடுத்தார். அப்போது வேளாண் மண்டலம் குறித்து அவரிடம் பேசியதாக சொன்னார். ஆனால், கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று சொல்லவில்லை. அதை ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இன்று மாலைக்குள் முதலமைச்சர் கொடுத்து அனுப்பிய அந்த கடிதத்தில் எழுதியிருந்ததை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நான் அந்த கடிதத்தை வெளியிடுவேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.


Speed News

 • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட

  11,300 வென்டிலேட்டர்கள் சப்ளை

  கொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன. 

  இந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார். 

  Jul 4, 2020, 14:34 PM IST
 • சாத்தான்குளம் வழக்கில் 

  மேலும் 4 பேர் கைது

  சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.

  இந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  Jul 4, 2020, 14:30 PM IST
 • அமைச்சர் மனைவிக்கு கொரோனா..

  தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.

  ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  Jul 4, 2020, 14:26 PM IST
 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST
 • டெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு

  கொரோனா பாதிப்பு

  டெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.

  Jul 1, 2020, 13:45 PM IST