சென்னையில் முஸ்லிம்கள் பிரம்மாண்ட பேரணி.. மாவட்டங்களில் முற்றுகை போராட்டம்..

by எஸ். எம். கணபதி, Feb 19, 2020, 14:06 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, சென்னையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதே போல், மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு, சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) கொண்டு வந்துள்ளது. இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் நாடுகளிலிருந்து 2015ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கேரளா, மேற்குவங்கம் உள்படப் பல மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதே போல், தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக முஸ்லிம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் இன்று(பிப்.19) தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்குச் சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. எனினும், தங்கள் அமைப்புகளை விசாரிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்புகளின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று சென்னை அண்ணாசாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதுடன், முற்றுகைப் போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், இந்த பேரணி சேப்பாக்கம் மைதானம் அருகே நிறுத்தப்பட்டது. பேரணியில் வந்தவர்கள் தேசியகீதம் பாடிவிட்டு, அமைதியாகக் கலைந்து சென்றனர்.

இதே போல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்படப் பல மாவட்டங்களில் ஜமாத்துகள், உலமாக்கள் உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் கையில் தேசியக் கொடிகளை ஏந்தியும், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றைக் கைவிடக் கோரிய பேனர்களை ஏந்தியும் சென்றனர்.

You'r reading சென்னையில் முஸ்லிம்கள் பிரம்மாண்ட பேரணி.. மாவட்டங்களில் முற்றுகை போராட்டம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை