உலமாக்கள் ஓய்வூதியம் உயர்வு.. சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Feb 19, 2020, 14:18 PM IST

உலமாக்களின் ஓய்வூதியம் அதிகரிப்பு உள்பட முஸ்லிம்களுக்காக சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நிதிநிலை மீதான பொது விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று(பிப்.19) சட்டசபையில் பேரவை விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவர் கூறியதாவது:
உலமாக்களுக்குத் தமிழக அரசு வழங்கும் ஓய்வூதியம் ரூ.1500ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வசதியாகச் சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் கட்டப்படும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக அரசின் நிதிநிலையிலும் மசூதிகளுக்கான பராமரிப்பு செலவை ரூ.5 கோடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சட்டசபையில் முதல்வரின் அறிவிப்புகளுக்கு அமைச்சர் நிலோபர் கபில் நன்றி தெரிவித்துப் பேசினார். அவர் கூறுகையில், இஸ்லாமியர்களுக்காகப் பாதுகாப்பு அரணாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளங்குகிறார் என்று பாராட்டினார்.


Leave a reply