சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் உயிரிழப்பு.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

by எஸ். எம். கணபதி, Feb 19, 2020, 14:23 PM IST

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் பல உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

வங்காள மொழி திரைப்பட நடிகர் தபாஸ் பவுல், மும்பையில் வசிக்கும் தனது மகளைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். அங்கிருந்து கொல்கத்தாவுக்குத் திரும்பிச் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஜுகுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தபாஸ் பவுலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

இவர் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2 முறையும், அலிப்போர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஒரு முறையும் பதவி வகித்திருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டில் ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ. யால் கைது செய்யப்பட்டார். 13 மாதங்கள் கழித்து ஜாமீனில் விடுதலையானார்.

இந்நிலையில், கொல்கத்தாவுக்குக் கொண்டு வரப்பட்ட தபாஸ் பவுல் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, இரங்கல் தெரிவித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசின் சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகளின் தொல்லைகளால் பலர் உயிரிழந்து வருகிறார்கள். திரிணாமுல் கட்சியின் முன்னாள் எம்.பி. சுல்தான் அகமது, முன்னாள் எம்.பி. பராசன் பானர்ஜியின் மனைவி போன்றவர்கள் மத்திய அரசு விசாரணை ஏஜென்சிகளின் துன்புறுத்தல்களால் இறந்தனர். இப்போது தபாஸ் பவுல் மறைந்திருக்கிறார்.

மத்திய விசாரணை அதிகாரிகள், வழக்குகளைத் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். ஆனால், அவர்களால் எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். அதே சமயம், தபாஸ் பவுல் போன்றவர்கள் என்ன தவறு செய்தார்கள் எனத் தெரியவில்லை என்றார்.


Leave a reply