கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. கடந்த புதன்கிழமை அன்று பூந்தமல்லி அடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் இரவு நடந்த படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்படத் தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள். சுமார் 10க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் விபத்து நடப்பதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன் சம்பவ இடத்திலிருந்து நகர்ந்து சென்ற நிலையில் நூலிழையில் அவர்கள் உயிர் தப்பினார்கள். இந்த விபத்து தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைக்கா தயாரிப்பு நிறுவனம் உள்பட 4 தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் விபத்து குறித்து கமல், ஷங்கர் உள்ளிட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற 200 பேருக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்தனர். இதில் புதிய திருப்பமாக இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.