தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட்.. பிரேமலதா நம்பிக்கை..

by எஸ். எம். கணபதி, Feb 28, 2020, 14:34 PM IST

அதிமுக கூட்டணியில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை தேமுதிகவுக்கு வழங்கும் என்று நம்பிக்கை உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

திருச்சி தினமலர் பங்குதாரர் மறைந்த ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி மறைவுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா வந்தார். அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை கேட்டிருக்கிறோம். கூட்டணியின் ஆரம்பத்திலேயே கேட்டிருக்கிறோம். எனவே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஒரு இடத்தை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இது பற்றி, அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி விட்டு நல்ல முடிவு சொல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இன்று(பிப்.28) மாலை அதிமுக தலைமைக்கழக அலுவலகத்திற்கு சுதீஷ் சென்று முதல்வரைச் சந்தித்து பேசுவார். அப்போது நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்.
சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் குறித்து இஸ்லாமியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், முதலாவது கட்சியாக தேமுதிக குரல் கொடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது மாநிலங்களவைக்கு 6 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் 3 இடங்களில் வெற்றி பெறலாம். இதற்கு முன்னாள் துணைச் சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம்விஸ்வநாதன், தளவாய்சுந்தரம், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உள்பட ஏராளமானோர் போட்டி போடுகின்றனர். மேலும், பாஜகவும் ஒரு இடத்தை அதிமுகவிடம் எதிர்பார்க்கிறது.

ஏற்கனவே கடந்த முறை, பாமகவின் அன்புமணி ராமதாசுக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுத்ததில் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. காரணம், எம்பியானதுமே அன்புமணி ராமதாஸ் ஒரு கூட்டத்தில், இப்படியா எம்பி ஆவது? கேவலமாக இருக்கிறது... என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

இதற்கு அதிமுகவினர், சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பாமகவுக்கு எம்பி பதவியைக் கொடுத்து விட்டு, இப்படி பேச்சு கேட்க வேண்டுமா? என்று முணுமுணுத்தனர். தற்போது தேமுதிகவுக்கும் சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அந்த கட்சிக்கும் எம்.பி. சீட் கொடுக்கக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு உள்ளது. அதனால், தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் தரப்படுமா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்கள் கொடுத்து அக்கட்சியைச் சமாளிப்பார்களா? அல்லது தேமுதிக கோபித்துக் கொண்டு வெளியேறுமா என்பது போன்ற பரபரப்புகள் ஏற்பட்டுள்ளன.

You'r reading தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட்.. பிரேமலதா நம்பிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை