அனுமதியின்றி நடத்தப்படும் சிஏஏ போராட்டங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு..

by எஸ். எம். கணபதி, Mar 5, 2020, 13:17 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஷாகின்பாக் என்ற இடத்தில் சிஏஏவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் 75 நாட்களுக்கு மேலாகத் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை உள்பட சில இடங்களில் தொடர் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், திருப்பூரில் சிஏஏவுக்கு எதிராக அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களைத் தடுக்க வேண்டும் என்று கோரி, வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில்,போலீஸ் அனுமதி பெறாமல் நடத்தப்படும் போராட்டங்களால் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுத்துவதால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இம்மனு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிஏஏவுக்கு எதிராகவும், ஆதரவு தெரிவித்தும் போலீஸ் அனுமதியின்றி நடைபெறும் சட்டவிரோத போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அந்த போராட்டக்காரர்களைக் கைது செய்து அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.

You'r reading அனுமதியின்றி நடத்தப்படும் சிஏஏ போராட்டங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை