தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படும் எம்.பி. தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் 3வது சீட் த.மா.காவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரலில் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, மார்ச் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி மார்ச் 13ல் முடிவடைகிறது. வாக்குப்பதிவு மார்ச் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதே நாளில். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது.
தமிழக சட்டசபையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் கிடைப்பார்கள். திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை வேட்பாளர்களாக ஏற்கனவே அறிவித்து அவர்கள் இன்று(மார்ச்9) வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அதிமுக வேட்பாளர்களாகக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பொதுச் செயலாளர் தம்பிதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3வது இடம், த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடத்தில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.