கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.60 கோடி உடனடி ஒதுக்கீடு.. முதல்வர் அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Mar 16, 2020, 11:19 AM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முக்கிய துறைகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று(மார்ச்15) நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குப் பயணிப்பதையும், பொது இடங்களில் மொத்தமாகக் கூடுவதையும், 15 நாள்களுக்கு பொது மக்கள் தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தனிநபர் சுகாதாரத்தைப் பேணுவதுடன், வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளைச் சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவேண்டும்.
குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவ்வப்போது கைகளைச் சோப்பு போட்டு சுத்தம் செய்வதையும் பெற்றோர் உறுதி செய்யவேண்டும். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகளை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கத் தேவையான வசதிகளை, முடிந்தவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும், தொடக்கப்பள்ளிகளுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கவும், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், வணிக வளாகங்களையும் (மால்கள்) 31ம் தேதி வரை மூடவும் உத்தரவிட்டுள்ளேன்.
கெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.30 கோடி, போக்குவரத்துத்துறைக்கு ரூ.5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.3 கோடி, பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு ரூ.2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு ரூ.2.5 கோடி ஆக மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்க ஆணையிட்டுள்ளேன்.

மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்த அறிக்கையை மாவட்டக் கலெக்டர்கள், தினந்தோறும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்ப வேண்டும். அவற்றை ஆணையா் தொகுத்து, முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்குத் தினந்தோறும் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

READ MORE ABOUT :

Leave a reply