ஜெயலலிதாவிற்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம்: கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு

Mar 2, 2018, 10:24 AM IST

சென்னை: மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.43.63 கோடி மதிப்பில் நினைவிடம் கட்ட கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோதே உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல் பின்னர் டிசம்பர் 6ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர், ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, ரூ.43.63 கோடி செலவில் நனைவிடம் கட்ட இருப்பதாகவும், கட்டுமானப்பணிக்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி பொதுப்பணித்தறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த 21ம் தேதி வரை என கால அவகாசத்தை நீட்டித்து பொதுப் பணித்துறை இறுதி செய்தது.

கட்டுமானப் பணியில் ஈடுப்பட கிருஷ்ணமூர்த்தி நிறுவனம், பி.எஸ்.கே நிறுவனம், வெங்கடாஜலபதி நிறுவனம், மாணிக்கம் நிறுவனம், ராஜதுரை நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தன. இதில், குறைந்தபட்ச தொகையில் கட்டுமானப் பணியை முடிக்கும் மதிப்பீடு பட்டியலை இந்நிறுவனங்கள் சமர்ப்பித்து இருந்தன. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஒப்பந்தப்புள்ளி குழு ஒப்பளிப்பு குழு கூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான உத்தரவையும் அந்நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.

மேலும், இன்னும் 15 நாட்களில் கிருஷ்ணமூர்த்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்படும் எனவும், 12 மாதங்களில் நினைவிடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து இதன் பணியை கண்காணிப்பு பொறியாளர் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஜெயலலிதாவிற்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம்: கிருஷ்ணமூர்த்தி நிறுவனம் தேர்வு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை