வேலையிழந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க முஸ்லிம் லீக் வலியுறுத்தல்..

by எஸ். எம். கணபதி, Mar 23, 2020, 13:52 PM IST

கொரோனா கதவடைப்பால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடு முழுவதும் அச்சுறுத்தலுக்கு ஆகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் இதுவரை உயிரிழந்தனர். நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டது.
புதுவை, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா மாநில மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் அமைப்புசாரா தொழிலாளர்கள், சாலையோரம் வசிப்போர், வாழ்வாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோர் தற்போதைய சூழ்நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வரும் அடித்தட்டு மக்கள் அரசின் கடுமையான உத்தரவின் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலை இல்லாமலும், வருமான இல்லாமலும் தத்தளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் தமிழக அரசு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதே போன்று தமிழகத்தில் சாலையோரங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர் வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக உணவு கிடைக்காமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.


Leave a reply